உலகப் பாப் இசை உலகின் முடிசூடா ராணியாகத் திகழும் டெய்லர் ஸ்விஃப்ட், தனது அசாத்திய இசைத் திறமையால் மட்டுமின்றி, உலகளவில் பில்லியன் கணக்கிலான ரசிகர்களையும், பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். சுமார் 2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரப் பாடகியாக வலம் வரும் டெய்லர் ஸ்விஃப்ட், தனது காதலர் டிராவிஸ் கெல்ஸ் என்பவரை ஜூலை 3ஆம் தேதியான நாளை திருமணம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகமே உற்றுநோக்கும் இந்த பிரம்மாண்ட ராயல் திருமணத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 10 முதல் 20 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 95 கோடி முதல் 190 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘மேடிசன் ஸ்கொயர் கார்டன்’ அரங்கில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த அரங்கின் ஒரு நாள் வாடகை மட்டுமே 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.9 கோடி) என்றும், திருமண ஏற்பாடுகளுக்காக இந்த அரங்கைத் தயார் செய்ய மட்டுமே தனியாக 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.28 கோடி) செலவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முற்றிலும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திருமண விழாவிற்கு பாரம்பரிய அழைப்பிதழ்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் அழைப்பிதழ்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்ளும் 1100-க்கும் மேற்பட்ட விஐபி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பிதழுடன் சேர்த்து, திருமணத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியே கசியாமல் இருக்க ‘ரகசிய காப்பு ஒப்பந்தம்’ ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விஐபி பட்டியலில் எட் ஷீரன், செரி சீபார்ன், ஜோ கிராவிட்ஸ், சுகி வாட்டர்ஹவுஸ் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஜூலை முதல் வாரத்தில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சாலைகளைத் தற்காலிகமாக மூடவும், மேடிசன் ஸ்கொயர் கார்டனின் ஒட்டுமொத்த கால அட்டவணையை முடக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த தனியார் பாதுகாப்புப் படைகள் மற்றும் கூடுதல் ஊழியர்களுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருமணத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், உலகின் மிகப்பெரிய இசை கச்சேரிகளுக்கு மேடை அமைக்கும் ‘ராக் லிட்டிட்ஸ்’ வளாகத்தில் இவர்களது குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தத் திருமணம் ஒரு பாரம்பரிய சடங்காக இல்லாமல், உலகமே வியக்கும் ஒரு பிரம்மாண்ட மியூசிக் திருவிழாவாக அமையவுள்ளது என்பது மட்டும் உறுதி!