திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாக ஊழியர்கள் மருத்துவ விடுப்பு (Sick Leave) எடுப்பது வழக்கம் தான் என்றாலும், தற்போதைய கார்ப்பரேட் உலகில் அந்த விடுப்புக்கான காரணத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், ‘ஜென்-ஜி’ (Gen Z) தலைமுறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கும், அவரது மேலாளருக்கும் இடையே வாட்ஸ்அப்பில் நடந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு காய்ச்சல் என்பதால் விடுப்பு வேண்டும் என்று கேட்ட ஊழியரிடம், நிறுவன இயக்குநரின் உத்தரவுப்படி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை (Medical Prescription) சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஸ் நிபந்தனை விதித்துள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த அந்த ஊழியர், “ஒவ்வொரு விடுப்புக்கும் சான்று கொடுக்க நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல; என்னிடம் இருக்கும் விடுப்பு உரிமையைத்தான் பயன்படுத்துகிறேன். பெற்றோர் கையெழுத்து வாங்கும் லீவு லெட்டரோ அல்லது மருந்துச் சீட்டோ என்னிடம் இல்லை, இனி நான் ஓய்வெடுக்கப் போகிறேன், மெசேஜ் மற்றும் கால்களுக்குப் பதிலளிக்க மாட்டேன் என்று தடாலடியாகப் பதிலளித்துவிட்டு உரையாடலை முடித்துள்ளார்.

இந்த வாட்ஸ்அப் சாட் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்கைகள் குறித்த பெரிய விவாதம் வெடித்துள்ளது. ஒரு தரப்பினர் ஊழியரின் கருத்துக்கு ஆதரவாக, “நிறுவனத்திற்கும் ஊழியருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது” என்று வாதிடுகின்றனர்.

மறுபுறம், ஊழியர்கள் விடுமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நிறுவனங்களுக்கு விதிகளை வகுக்க உரிமை உண்டு என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இன்றைய இளந்தலைமுறையினர் தங்களின் சுயமரியாதை, மனநலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகவும், சிறிய விடுப்புகளுக்குக் கூட மருத்துவ சான்றுகளைக் கட்டாயமாக்குவது எந்த வகையில் நியாயம் என்றும் கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.