உத்தரப் பிரதேசம் நொய்டாவில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, புதுப்பெண் ஒருவர் தனது கணவர் மீது கொலை மிரட்டல் மற்றும் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகப் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய இடங்களுக்கு அவர்கள் தேனிலவு சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, கணவன் அந்தப் பெண்ணை படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொடூரமாகத் தாக்கியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண்ணுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

​இந்தக் கொடுமை இத்துடன் நின்றுவிடாமல், அவர்கள் நொய்டா திரும்பிய பிறகும் தொடர்ந்ததாக அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அங்கேயும் தன்னை கணவன் மீண்டும் தாக்கியதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் சென்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நொய்டா போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.