ஐஐடி மெட்ராஸில் படித்துவிட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகாததால், மிகுந்த மனவேதனைக்குள்ளான ஜேஇஇ தேர்வர் ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் எழுதிய உருக்கமான பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சிறு வயது முதலே தான் ஆவலோடு கண்டு வந்த முதல் கனவு இதோடு முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த மாணவர் தனது பதிவில் மிகுந்த ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் குறிப்பிட்டுள்ளார். ஐஐடி மெட்ராஸில் மிகக் குறைந்த மதிப்பெண் அல்லது ரேங்க் வித்தியாசத்தில் சேர்க்கை வாய்ப்பை இழந்தது, அவருக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தையும் துயரத்தையும் தந்துள்ளது என்பதை அந்த உணர்ச்சிப்பூர்வமான கடிதம் வெளிப்படுத்துகிறது.

இந்த மாணவனின் உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரையும் நெகிழச் செய்துள்ளது. இந்த கடினமான தருணத்தில் அந்த மாணவருக்கு ஆதரவளிக்கும் வகையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுடைய வாழ்க்கையிலும் இது போன்ற தோல்விகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டதாகவும், ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து தங்களுக்குக் கிடைத்த மாற்று வாய்ப்புகள் மூலம் எப்படி வாழ்க்கையில் வெற்றியடைந்தோம் என்ற தங்களின் சொந்த அனுபவங்களை பகிர்ந்து அந்த மாணவருக்குப் பேராதரவும் தன்னம்பிக்கையும் அளித்து வருகின்றனர்.