உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்த 33 வயது இந்திய மாலுமி ராகேஷ் சௌஹான், கடந்த 2025 நவம்பர் மாதம் ‘எக்ஸ்ஃபினிட்டி’ (Xfinity) என்ற நிறுவனம் மூலம் வணிகக் கப்பலில் வேலைக்காக வெனிசுலா சென்றிருந்தார். கடந்த மே மாதம் அவர் கப்பலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகவும், பின்னர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகவும் கப்பல் நிறுவனம் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தது.
ஆனால், வெனிசுலா அரசிடமிருந்து எந்தவொரு பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இல்லாமல், சுமார் ஒரு மாதமாகப் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ராகேஷின் உடல் கடந்த ஜூன் 4 அன்று அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. கப்பல் நிறுவனத்தின் நடத்தையில் சந்தேகமடைந்த ராகேஷின் குடும்பத்தினர் மற்றும் இந்திய மாலுமிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்தியாவில் மீண்டும் ஒரு மறு-பிரேதப் பரிசோதனை நடத்தக் கோரினர்.
⚠️ SHOCKING CASE — Indian Seafarer #RakeshChauhan reported dead in #Venezuela.
Mortal remains sent back to his hometown in Uttar Pradesh without any autopsy report or details from Venezuelan authorities.
Family demanded re-autopsy. The official Post-Mortem Report conducted in… pic.twitter.com/4dGSZtPEfp— FSUI (@FSUIINDIA) June 30, 2026
இந்தியாவில் நடத்தப்பட்ட அந்த அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனையில், ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கும் படியான ஒரு கொடூர உண்மை வெளிவந்துள்ளது. ராகேஷின் உடலில் ஒரு உள் உறுப்பு கூட இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது மூளை, இதயம், இரண்டு நுரையீரல்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ணீரல், கணையம், வயிறு, குடல்கள், தைராய்டு மற்றும் தொண்டைக் குழாய் என அனைத்தும் உடலில் இருந்து மொத்தமாகத் திருடப்பட்டு, வெறும் உடல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ராகேஷின் கழுத்தில் இருந்து அடிவயிறு வரை 22 தையல்களும், ஒரு காதிலிருந்து மறு காது வரை தலையின் பின்புறம் 21 தையல்களும் போடப்பட்டிருந்தன.
உடலில் எந்தவொரு வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும், முக்கிய உறுப்புகள் எதுவும் இல்லாததால் ராகேஷின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் இந்திய மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். வெளிநாடுகளில் இந்தியத் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், மத்திய அரசும் வெனிசுலாவில் உள்ள இந்தியத் தூதரகமும் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று மாலுமிகள் சங்கம் மற்றும் ராகேஷின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
