கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொல்லம் பரவூரைச் சேர்ந்த 22 வயதான பிரபல கொள்ளையன் அபிஜித் என்பவனைக் கொல்லம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் – கொல்லம் மெமு ரயிலில் போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாஸ்தாம்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இவன் பிடிபட்டான். போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இவன், இரண்டு காவலர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்தினான்.
எனினும், போலீஸார் அவனை சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த பையில் இருந்து திருடப்பட்ட ₹65,500 ரொக்கப் பணம், ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவனது திருட்டுப் பாணி மிகவும் வித்தியாசமானது; ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளுக்கு முறையான பயணச்சீட்டுகளை எடுத்துக்கொண்டு ஏறும் இவன், அசந்து தூங்கும் பயணிகளிடமிருந்து லேப்டாப், மொபைல் போன்கள், தங்கம் மற்றும் பணத்தைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
பின்னர், ரயில் ஆள் நடமாட்டமில்லாத தனிமையான பகுதியைக் கடக்கும்போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துத் தப்பி விடுவான். ஏற்கனவே திருச்சியில் தமிழ்நாடு போலீஸாரிடம் பிடிபட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பியோடி தலைமறைவாக இருந்த இவன் மீது, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் பல வழக்குகள் உள்ளன. தற்போது பணியில் இருந்த போலீஸாரைத் தாக்கியதற்காக இவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
