அதிமுகவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், திருப்பூர் மாநகரில் தனக்கு முகவரியையும் அடையாளத்தையும் ஏற்படுத்தித் தந்தவர் ஜெயலலிதா தான் என்று நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். 1980-ல் எளிய தொண்டனாக இணைந்து கிளைக் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை உயர்ந்த தனக்கு, 2011-ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளையும் ஜெயலலிதா வழங்கி அழகு பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கடந்த 2021 தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், ஆனால் திருப்பூர் மாநகரில் கட்சி தொடர்ந்து பலமிழந்து வருவது குறித்து பலமுறை தலைமையிடம் சுட்டிக்காட்டியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதுதான் திருப்பூரில் கட்சியின் உண்மை நிலை தனக்குத் தெரிந்ததாகக் கூறிய அவர், “தேர்தலில் எங்களைப் போன்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்த போது தலைமை எந்தவிதமான ஆறுதல் வார்த்தைகளோ, ஊக்கத்தையோ தரவில்லை. கண் முன்னேயே இயக்கம் கரைகிறது; அதைத் தடுக்கவும் தலைமை விரும்பவில்லை. இன்றோ தலைமையே இயக்கத்தைப் பார்க்காமல் தங்களை மட்டுமே காத்துக்கொள்வதில் அக்கறை காட்டுகிறது. எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்பும் தலைமையுடன் ஒரு சுயநலக் கூட்டம் இயங்கிக் கொண்டிருக்கின்றது” என்று இபிஎஸ் தலைமையைக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னாள் அமைச்சரின் இந்த அதிரடி விலகல் திருப்பூர் மாவட்ட அதிமுகவினர் இடையேயும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
