உத்தரப் பிரதேச மாநிலம் ரைபரேலி (Raebareli) மாவட்ட அரசு மருத்துவமனையில், அசைவற்று தரையில் அமர்ந்திருந்த ஒரு ஏழை நோயாளியை அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் கொடூரமாகக் காலால் எட்டி உதைத்து அராஜகம் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியா  புயலையும் பொதுமக்கள் மத்தியிலும் மெகா கொந்தளிப்பையுமே கிளப்பியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த 39 செகண்ட் பரபரப்பு வீடியோவில், மருத்துவமனை தரைப்பகுதியில் அமர்ந்திருக்கும் ஒரு நிராதரவான நோயாளியை, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் அங்கிருந்து எழுந்து போகுமாறு கெட்ட வார்த்தைகளால் திட்டி, சுமார் 10 முறைக்கும் மேலாகக் காலால் கொடூரமாக எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

இந்த அராஜக வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பயங்கர அரசு எதிர்ப்பு அலையை உருவாக்கியதை அடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் பிரஜேஷ் பாதக்கின் (Brajesh Pathak) நேரடி உத்தரவின் பேரில், அந்தப் பெண் ஊழியர் தற்பொழுது அதிரடியாக வேலை இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

போலிஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாக விசாரணையில், நோயாளியை உதைத்த அந்தப் பெண், அதே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்த ‘பிங்கி’ என்பது  தெரியவந்துள்ளது.

தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அந்தப் பெண் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொடூரச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் தினேஷ் பிரதாப் சரோஜ், மைக்ரோபயாலஜிஸ்ட் டாக்டர் ரிச்சா மற்றும் சிஸ்டர் மேட்ரன் சுஷ்மா யாதவ் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட  விசாரணைக் குழுவையும் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் புஷ்பேந்திர குமார் அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநில மருத்துவத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமித் குமார் கோஷ், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் எந்தவொரு ஊழியராவது மனிதநேயமற்ற முறையிலோ அல்லது அராஜகமாகவோ நடந்துகொண்டால், அவர்கள் மீது இரக்கமே காட்டாமல் மிகக் கடுமையான சட்டப்படியான ஆக்ஷன் எடுக்கப்படும் என்று போட்டுடைத்துள்ளார்.