தமிழக அரசியல் வட்டாரத்தை, குறிப்பாக அதிமுக உட்கட்சி அரசியலை ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுக்கும் வகையில் ஒரு மெகா அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. அதிமுகவின் கரூர் மாவட்ட முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து, அதிமுக தலைமைக்கு அதிரடிக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், “என்னுடைய தியாகங்களுக்கும், வேதனைகளுக்கும் பரிசாக எனக்குக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டிதான். கொள்கை ரீதியாக நம்முடைய பிரதான எதிரியான திமுகவுடன், அதிமுக எப்படி கைகோர்க்க முடியும்?” என்று மிகவும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இபிஎஸ்-ன் தலைமைக்கு நான் ஒருபோதும் எதிராக நின்றதில்லை. அவரை நிரந்தர பொதுச்செயலாளராக ஆக்குவதற்கு எங்கள் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம். ஆனால், எங்களின் கடுமையான எதிர்ப்பைத் துச்சமாக மதித்து, அவர் எடுத்த தன்னிச்சையான முடிவுதான் இன்று அதிமுகவை அழிவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” என்று எடப்பாடியின் தன்னிச்சையான போக்கை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
”உங்களின் இந்தச் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக இந்த விஜயபாஸ்கர் ஒருபோதும் தயாராக இல்லை” என்று குறிப்பிட்டு அவர் கட்சியை விட்டு வெளியேறியுள்ள இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் மற்றும் அரசியல் ஃபாலோயர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
