தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில், கணவன் மற்றும் மாமியாரின் தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் 23 வயது இளம்பெண் ஒருவர் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் கர்ப்பமடைந்த நிலையில், அவரது கணவன் அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு, “வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் அப்பாவா?” என்று கொடூரமாகக் கேள்வி எழுப்பியுள்ளான்.

அத்துடன் நிறுத்தாமல், பிறக்கப்போகும் குழந்தைக்கு டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணை நாளுக்கு நாள் சித்திரவதை செய்து வந்துள்ளான். ​கணவனின் இந்த அசிங்கமான சந்தேகத்திற்கும், அதற்கு உடந்தையாக இருந்து டார்ச்சர் செய்த மாமியாரின் கொடுமைக்கும் பயந்து, ஒட்டுமொத்தமாக மனமுடைந்த அந்தப் பெண் இந்த விபரீத முடிவைத் தேடிக்கொண்டார்.

ஒரு பெண்ணின் கற்பையும், தாய்மையையும் சந்தேகப்பட்டு, ஐந்து மாதக் கருவோடு அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “இப்படிப்பட்ட மிருகங்களுக்குச் சட்டப்படி மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் ஆவேசமாக வலியுறுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொடுமைக்கார கணவனையும் அவனது தாயாரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.