இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட்போன்களும், இன்டர்நெட்டும் குழந்தைகளுக்கு அக்குவேறா ஆணிவேறா தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு சுட்டிப்பையன், தன் தாய்க்குத் தெரியாமல் அவரது மொபைல் போனை எடுத்து, ஆன்லைன் ஷாப்பிங் ஆப் மூலம் 43 இன்ச் கூகுள் டிவி (Google TV) ஒன்றை ரகசியமாக ஆர்டர் செய்துள்ளான்.

ஒருநாள் திடீரென டெலிவரி பாய் பெரிய டிவி பாக்ஸோடு வாசலில் வந்து நின்றதைக் கண்டு அந்தத் தாய் பதறிப்போனார். “நான் அப்படி ஒரு ஆர்டரே பண்ணலையே” என்று அவர் டெலிவரி மேனிடம் வாதிட, அதன் பிறகுதான் அவரது ‘டெக்னாலஜி’ மகன் போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பேமெண்ட் விபரங்களைப் பயன்படுத்தி இந்த விலையுயர்ந்த டிவியை ஆர்டர் செய்தது தெரியவந்தது.

​விஷயத்தை அறிந்துகொண்ட தாய், டெலிவரி பாய் முன்னிலையிலேயே தன் மகனைப் பிடித்து “ஏண்டா இப்படி பண்ணுன?” என்று காரசாரமாகக் கேள்வி கேட்கும் வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. தவறு செய்த பயமே இல்லாமல், அந்தச் சிறுவன் அசட்டுச் சிரிப்புடன் கெத்தாக நிற்கும் ரியாக்‌ஷன் நெட்டிசன்களைச் சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பலர் தங்களது குழந்தைகளும் இதேபோல் ஆன்லைனில் ஆர்டர் செய்த கதைகளைப் பகிர்ந்து சிரித்தாலும், இன்னும் சிலரோ, “ஷாப்பிங் ஆப்ஸிற்கு பாஸ்வேர்ட் அல்லது ஓடிபி (OTP) லாக் போடாமல் வைப்பது எவ்வளவு ஆபத்தானது!” என்று எச்சரித்து வருகின்றனர். இச்சம்பவம், இக்காலப் பெற்றோர்கள் தங்களது போன் மற்றும் வங்கி விபரங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.