புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதனின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவரது வருங்கால மனைவி 20 வயது தியா கோயல், திருமணச் செலவுக்காகக் கொடுத்த ஒரு கோடி ரூபாயைத் தனது கள்ளக்காதலன் சேத்தன் சௌத்ரிக்கு மாற்றியுள்ளார்.

இந்தக் பணத்தைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்ட இருவரும், கேதன்னைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டனர். கடந்த ஜூன் 18-ம் தேதி லோககாட் கோட்டைக்கு அழைத்துச் சென்றபோது, கேதன்னை மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றது தியா மற்றும் சேத்தன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு முன்பே தியா மற்றும் சேத்தன் பலமுறை திட்டமிட்டுள்ளனர். ஜூன் 14-ம் தேதியே கேதன்னை மலையிலிருந்து தள்ளிவிடத் தியா முயற்சித்துள்ளார், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாகப் புதர்களைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினார்.

அதன்பின், தியா கொடுக்கும் சைகைக்குப் பிறகு, சேத்தன் வந்து கேதன்னைத் தள்ளிவிட வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு அதன்படியே கொலையைச் செய்துள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் கேமராக்களில் சிக்காமல் இருக்கச் சேத்தன் ஸ்கூட்டரில் வந்ததும், கொலைக்கு முன்பும் பின்னும் அவர்கள் தொலைபேசியில் பேசிய விவரங்களும் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.