தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், கடந்த சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தேடியபோது, வீட்டின் அருகே இருந்த குளக்கரையில் சிறுவன் மர்மமான முறையில் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.

அவனது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் இருந்ததோடு, ஆடைகளும் கலைக்கப்பட்டிருந்ததால், இது திட்டமிட்ட கொலை என்ற கோணத்தில்  காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் காணாமல் போவதற்கு சற்று முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் அவனைக் கூட்டிச் சென்றதாக அங்கிருந்த மற்ற குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவனைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது, அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், அதற்கு அந்தச் சிறுவன் பயந்து கூச்சலிட்டு தப்பிக்க முயன்றதால், ஆத்திரமடைந்து துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து, இந்த வழக்கை கொலை மற்றும் போக்சோ  சட்டப் பிரிவுகளின் கீழ் மாற்றிய காவல்துறையினர், கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.