பீகார் மாநிலம் மகனாஹா கிராமத்தில், பேய் ஓட்டுவதாகக் கூறி சுஷில் குமார் சர்மா என்ற நபரை அவரது தம்பிகளான வக்கீல் சர்மா மற்றும் போவா சர்மா ஆகியோர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பஞ்சாபில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்த முக்கிய குற்றவாளியான வக்கீல் சர்மாவை, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரது அண்ணன் சுஷில் குமார் சர்மா சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவில் சுஷில் குமாரின் கை, கால்களை கயிறு மற்றும் துணியால் கட்டி, வீட்டின் முற்றத்தில் வைத்து தம்பிகள் இருவரும் பேய் ஓட்டுவதாகக் கூறி இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். கணவரைக் காப்பாற்ற ஓடிவந்த சுஷில் குமாரின் மனைவியை, “இவருக்குப் பேய் பிடித்துள்ளது, அதைத்தான் ஓட்டுகிறோம்” என்று கூறி தடுத்து நிறுத்தியதுடன், தடியால் தாக்கி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
கொலை செய்வதற்கு முன்பாக, சுஷில் குமாருக்கு குர்தா-பைஜாமா ஆடை அணிவித்து, கொலைக்கு பயன்படுத்திய வாள் மற்றும் கத்திகளுக்கு தம்பிகள் இருவரும் சிறப்பு பூஜை செய்துள்ளனர். அதன்பின்னர், அந்த கூர்மையான ஆயுதங்களால் சுஷில் குமாரை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பூர்ணியா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
