அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்குத் தொடர்பு இருப்பது முதல் தகவல் அறிக்கையில் (FIR) அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிவசங்கரின் உதவியாளர் என்று கூறிக்கொண்ட இளஞ்செழியன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள எஃப்ஐஆர் விவரங்கள், இந்த மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் பங்கீட்டை அக்குவேற ஆணிவேறாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.
பாதிக்கப்பட்ட புகார்தாரரான சீனிவாசன் என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நீங்கள் அளித்த பணம் வந்துவிட்டது, விரைவில் வேலை வாங்கித் தரப்படும்” என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தனக்கு நேரடி உறுதி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சிவசங்கர் பலமுறை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி, தனக்கு அரசு வேலை கிடைப்பது உறுதி என நம்ப வைத்ததாகவும் சீனிவாசன் புகாரில் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்த ஒருவரின் பெயரே நேரடியாக வேலை மோசடி எஃப்ஐஆரில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
