பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி வில்லன் நடிகராக முத்திரை பதித்த பிரதீப் காப்ரா, சமீபத்தில் இலங்கைக்கு ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ராவணனின் லங்கை, ராவணன் நீராடிய இடங்கள் மற்றும் அன்னை சீதையை சிறைவைத்த பகுதிகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு, அதுகுறித்த நெகிழ்ச்சியான வீடியோக்களைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இலங்கையில் உள்ள அருங்காட்சியகத் தரவுகளின்படி, ராவணன் சீதா தேவியைக் கடத்தி வந்து முதலில் ‘எலா’ (Ella) பகுதியில் உள்ள ஒரு ரகசியக் குகையில் தான் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த ‘ராவணன் குகை’யையும் அதன் பின்னணியையும் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து, சீதா தேவி சிறை வைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற ‘அசோக வனம்’ மற்றும் அனுமன் முதன்முதலில் சீதையைச் சந்தித்து அடையாள மோதிரத்தைக் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரத்தையும் அவர் ரசிகர்களுக்குக் காட்டியுள்ளார். வால்மீகி ராமாயணத்தின்படி, திரிகூட மலைத்தொடரில் தங்கத்தால் கட்டப்பட்டு, யாராலும் வெல்ல முடியாத கோட்டையாகத் திகழ்ந்த ராவணனின் அரண்மனை இன்று சிதைந்த எச்சங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. ராவணனின் அரியணை இருந்த அந்த பிரம்மாண்ட அரண்மனைப் பகுதியையும், அவன் நீராடிய இடங்களையும் பிரதீப் காப்ரா விவரித்த விதம் அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. வீட்டிலிருந்தபடியே தங்களுக்கு இந்த வரலாற்று இடங்களைத் தரிசிக்க வைத்ததற்காக, “உங்களால்தான் எங்களால் இந்த அதிசய இடங்களை நேரில் பார்க்க முடிந்தது, மனமார்ந்த நன்றிகள்” என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியுடன் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
