இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்புகளின் தன்மைகளும் வியக்கத்தக்க வகையில் மாறி வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டேட்டிங் இணையதளம் (Dating Website) ஒன்று வெளியிட்டுள்ள வினோதமான வேலைவாய்ப்பு விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் வைரலாகி வருகிறது.
காதலிப்பவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, சுமுகமான முறையில் பிரிவை (Breakup) ஏற்படுத்தித் தருவதற்காக ‘தலைமை பிரேக்ப் அலுவலர்’ (Chief Breakup Officer) என்ற புதிய பணியிடத்தை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் தொழில்முறை சமூக வலைத்தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வினோதமான பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதந்தோறும் இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 2.8 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலில் இருந்து பிரிய நினைப்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குப் பதிலாக அவர்தம் இணையருடன் (Partner) பேசி, இரு தரப்புக்கும் மனக்கசப்பு ஏற்படாத வண்ணம் சுமுகமாக பிரேக்ப் செய்ய வைப்பதே இந்த அதிகாரியின் முக்கிய வேலையாகும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரிய அளவில் கல்லூரிப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மிக முக்கியமான ஒரு வினோத தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தனது சொந்த வாழ்க்கையில் குறைந்தபட்சம் 3 முறையாவது காதலித்து, பிரேக்ப் (Breakup) ஆகியிருக்க வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதுதான் பிரிவின் வலியும், அதனை எப்படிக் கையாள்வது என்ற பக்குவமும் அவர்களுக்குத் தெரியும் என்பதால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் இதனைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். “காதலைச் சேர்த்து வைக்கத் தான் ஊரில் கட்டப் பஞ்சாயத்து செய்வார்கள், ஆனால் காதலைப் பிரித்து வைக்க இவ்வளவு பெரிய சம்பளத்தில் ஒரு வேலையா?” என்று நெட்டிசன்கள் வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் வேடிக்கையாக “இத்தனை நாட்களாக வீணாகப் போன எனது பிரேக்ப் அனுபவங்களுக்கு இப்போது தான் நல்ல பலன் கிடைக்கப் போகிறது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
