புனேயில் நடந்த கேதன் அகர்வால் கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்பத் நகரின் பினோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்வாடா கிராமத்தில் வசித்து வந்த ராஜீவ் என்பவரது மனைவி நிஷா, பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ராந்த் என்ற வாலிபனுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது விபரீத உறவு குறித்து கணவன் ராஜீவுக்குத் தெரியவரவே, அவர் தனது மனைவியின் நடத்தையைக் கடுமையாக எதிர்த்துக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி நிஷா, தனது கள்ளக்காதலன் விக்ராந்துடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்ட ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்; அதன்படி, சம்பவத்தன்று கணவன் ராஜீவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அவர் மயக்கமடைந்ததும், கள்ளக்காதலனை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த ராஜீவ் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளனர்; அலறல் சத்தத்தைக் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி 7 நாட்களுக்குப் பிறகு ராஜீவ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொடூர மனைவி நிஷா மற்றும் அவரது கள்ளக்காதலன் விக்ராந்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கொந்தளித்துப் போராடி வரும் தகவல் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
