மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே போஸ்டர் யுத்தமும், காரசாரமான அரசியல் மோதலும் வெடித்துள்ளது. ராகுல் காந்தி தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், “காணாமல் போன ராகுல் காந்தி”, “ராகுல் காந்தி எங்கே?”, “பாரீஸில் ராகுல் காந்தி” போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பா.ஜ.க.வினர் வெளியிட்டு கிண்டல் செய்துள்ளனர். இது குறித்துப் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா, “எதிர்க்கட்சித் தலைவர்”  என்ற பதவியை ‘சுற்றுலாத் தலைவர்’  என மாற்ற வேண்டும். பிரதமர் கடுமையாக உழைக்கும் வேளையில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மட்டுமே செய்கிறார்” என்று சாடினார்.

மற்றொரு செய்தி தொடர்பாளரான ஆர்.பி. சிங், “இது ராகுலின் 55-வது வெளிநாட்டுப் பயணம் என்றும், இதற்காகப் பொது வெளியில் உள்ள ஆவணங்களின்படி ரூ.60 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியதோடு, அவரது வருமானத்திற்கு அப்பாற்பட்ட இந்தச் செலவுகளுக்கான நிதி எங்கிருந்து வருகிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும், கிண்டல்களுக்கும் காங்கிரஸ் கட்சி  பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், “ராகுல் காந்தி நமது நாட்டிற்கு மட்டும் தலைவர் அல்ல, உலக அளவில் பெரும்பாலான நாடுகள் அவரை ஒரு தலைவராகவே கருதுகின்றன.

உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள் அவரை நேரில் பார்க்கவும், சந்திக்கவும், அவரது உரையைக் கேட்கவும் விரும்புகின்றனர். சர்வதேச அளவில் அவருக்கு வரும் தொடர்ச்சியான அழைப்புகள் காரணமாகவே, அவர் 2 முதல் 5 நாட்கள் வரையிலான மிகக் குறுகிய கால வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார். உலகில் உள்ள அனைவரும் பா.ஜ.க.வின் கொள்கைகளை ஏற்பவர்கள் அல்ல;  உலக மக்கள் இந்தியாவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கிறார்கள், அதே மாற்றுப் பார்வையில்தான் ராகுல் காந்தியையும் பார்க்கிறார்கள்” என்று பா.ஜ.க.வின் விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.