ஹைதராபாத் அடுத்த ஷாமிர்பேட் பகுதியின் முன்னாள் வட்டாட்சியரும், இணை சார்-பதிவாளருமான  சுசரிதா என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ. 5.05 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நில வகைப்பாடு மாற்றத்திற்காக விவசாயி ஒருவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் முதற்கட்டமாக ரூ. 2 லட்சம் வாங்கியபோது கடந்த மே மாதம் சுசரிதா லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைகாட்டிமாகப் பிடிபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த லஞ்சப் புகாரின் தொடர்ச்சியாக, அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள், சுசரிதா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 4 இடங்களில் அதிரடியாகச் சோதனையில் இறங்கினர். இந்த அதிரடி சோதனையின் போது, சித்திபேட் மாவட்டத்தில் உள்ள 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஹைதராபாத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள 3 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 2 வீட்டு மனைகளுக்கான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரது இல்லத்தில் இருந்து ரூ. 12 லட்சம் ரொக்கம், ரூ. 38 லட்சம் வங்கி இருப்பு, 2 சொகுசு கார்கள் மற்றும் சுமார் ரூ. 1.20 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அரசுப் பதிவு மதிப்பு ரூ. 5.05 கோடி என்றாலும், சந்தையில் இவற்றின் தற்போதைய மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ. 30 லட்சம் லஞ்ச வழக்கில் சிக்கிய பெண் அதிகாரியின் வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துகள் குவிந்திருப்பது தெலங்கானா அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.