பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுபவருமான சோயப் அக்தரின் மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில், இந்தியாவின் மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் பங்கேற்றுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. லஷ்கர் அமைப்பின் அரசியல் பிரிவாகச் செயல்படும் ‘பாகிஸ்தான் மர்கசி முஸ்லிம் லீக்’ என்ற கட்சி வெளியிட்டுள்ள வீடியோ பதிவின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
🔴#BREAKING | 26/11 Mastermind’s Associates Spotted At Shoaib Akhtar’s Brother’s Funeral
NDTV’s @deepduttajourno joins @reetksahni with more details pic.twitter.com/dqLdjPjwAh
— NDTV (@ndtv) June 27, 2026
வெளியான அந்த வீடியோவில், PMML கட்சியின் இஸ்லாமாபாத் தலைவர் இனாம்-உர்-ரஹ்மான் காம்போ, துணை பொதுச் செயலாளர் அப்துல்லா தூர், மண்டல பொதுச் செயலாளர் ஹஃபீஸ் உமர் மற்றும் கித்மத் கமிட்டி தலைவர் அம்ஜத் பட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இறுதிச்சடங்கில் வரிசையாக நின்று பிரார்த்தனை செய்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. தனது சகோதரரின் மரணம் குறித்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த சோயப் அக்தர், பயங்கரவாத அமைப்பின் முக்கிய முகங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பாகிஸ்தானில் பொதுமக்களுக்குப் பரிச்சயமான ஒரு பிரபலத்தின் வீட்டு நிகழ்விலேயே பயங்கரவாதிகள் எந்தவித அச்சமும் இன்றி தாராளமாக உலா வருவது, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடமாக விளங்குவதாக இந்தியா சர்வதேச அரங்கில் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
