ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், தங்கியிருந்த பயணி ஒருவர் தனது அறையிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்ற சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நேர்மையோடு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பாரத் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்துவிட்டு, அவசரமாகத் தனது ஊருக்குக் கிளம்பியுள்ளார். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பையை ஹோட்டல் அறையிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

​தங்களது ஊரான பெங்களூரை அடைந்த பிறகுதான், நகைப் பையை ஹோட்டலிலேயே விட்டு வந்த அதிர்ச்சி உண்மை பாரத்திற்குத் தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அவர் திருப்பதி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, ஹோட்டலின் கேஷியரான சசி என்ற பெண், அந்த நகைப் பையைப் பத்திரமாக எடுத்து வைத்திருந்ததை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பதி மாவட்ட எஸ்பி எல். சுப்பராயுடு முன்னிலையில், கேஷியர் சசி அந்த 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை உரிய குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைத்தார். அந்தப் பெண்ணின் அசாத்திய நேர்மையைப் பாராட்டிய மாவட்ட எஸ்பி, அவருக்குச் சால்வை அணிவித்துத் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.