உஜ்ஜைன் நகரின் பரபரப்பான தாவா பஜார் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 19 வயதுடைய பூஜா என்ற இளம் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த பூஜாவை வழிமறித்த சுனில் என்ற நபர், வாக்குவாதத்திற்குப் பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஜாவை 13 விநாடிகளில் 15 முறை சரமாரியாகக் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த பூஜாவைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த நபர் தனது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த பூஜா, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூரமான தாக்குதல் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டறிந்த நீல்கங்கா காவல்துறையினர், அவர் விட்டுச் சென்ற வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சுனிலை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வணிக மையங்களில் பொது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றவாளி பிடிபட்ட பிறகே இந்த கொடூரத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.