மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், மாப்பிள்ளைக்கு வழுக்கைத் தலை இருப்பதும், அதை மறைக்க அவர் விக் (Wig) அணிந்திருந்ததும் தெரிந்ததால், ஆத்திரமடைந்த அவரது வருங்கால மனைவி சியா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேத்தனுக்கு வழுக்கை தலை இருப்பது தெரிந்ததில் இருந்தே சியாவிற்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சியாவிற்கு சேத்தன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்த கேத்தனை முற்றிலும் ஒழித்துக்கட்டுவது தான் ஒரே வழி என இருவரும் சேர்ந்து மெகா ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றால் அதை ஏன் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை என போலீசார் கேட்டதற்கு, குடும்பத்தினரை ஏமாற்றவோ அல்லது அவர்களின் மனதை புண்படுத்தவோ தனக்கு விருப்பமில்லை என்றும், அதற்குப் பதிலாக கேத்தன்கை கொன்றுவிட்டால் எல்லாம் சுமுகமாக முடிந்துவிடும் எனத் தான் நம்பியதாகவும் சியா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லோனாவாலா மலைப்பகுதியில் டிரெக்கிங் அழைத்துச் சென்று, அங்கிருந்து கேத்தனை தள்ளிவிட்டால் அது விபத்து என்று அனைவரும் நம்புவார்கள் என்றும், அங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் தங்களை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள சியாவும், சேத்தனும் சதித்திட்டத்தை ஒப்புக்கொண்ட போதிலும், ‘நீ தான் கேத்தனை மலையிலிருந்து தள்ளினாய்’ என்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்த சியாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் இதுவரை அவரை சிறையில் வந்து பார்க்கக்கூட இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.