உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், காவல்துறையில் சேர்ந்து வெறும் ஒன்றரை மாதமே (45 நாட்கள்) ஆன இளம் காவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் லஞ்சம் வாங்கும் போது சிக்கியதால், அவரது வேலை உடனடியாக பறிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  33 வயதான விவேக் குமார், கடந்த 2025 ஜூன் மாதம் காவல்துறையில் சேர்ந்து பயிற்சியை முடித்த பின், கடந்த ஏப்ரல் 24, 2026 அன்றுதான் ஷாஜஹான்பூரின் ஜெய்திபூர் காவல் நிலையத்தில் தனது முதல் பணியைத் தொடங்கினார். தனது சுறுசுறுப்பான செயல்பாட்டால் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஸ்வினி குமாரின் மெய்க்காப்பாளராகவும் அவர் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 12 அன்று ஜெய்திபூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபர் ஒருவரிடம், வழக்கை சுமுகமாக முடித்துத் தருவதாகக் கூறி விவேக் குமார் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே ரகசியமாக வலை விரித்தனர். அங்கு வைத்து விவேக் குமார் 35,000 ரூபாய் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்த ஷாஜஹான்பூர் எஸ்பி சௌரப் தீட்சித், முதலில் இன்ஸ்பெக்டர் அஸ்வினி குமாரை சஸ்பெண்ட் செய்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில், காவலர் விவேக் குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையானது என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை காவல்துற பணியில் இருந்து நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.