சிட்கோ பகுதியில் உள்ள பிரபல ‘ஃபர்ஸ்ட் க்ரை இன்டெல்லிடாட்ஸ்’ (FirstCry Intellitots) ப்ரீ-ஸ்கூலில், வெறும் 23 மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றுக்கு, பள்ளி ஊழியர்களின் கடுமையான அலட்சியத்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூர காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நகரையே உலுக்கியுள்ளது. வழக்கறிஞரான குழந்தையின் தந்தை, காலையில் குழந்தையைப் பள்ளியில் விட்டுச் சென்ற நிலையில், ஆசிரியர் இல்லாத நேரத்தில் அங்கிருந்த காப்பாளர் குழந்தைகளை வகுப்பறைக்குள் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இதனால் பயந்துபோன குழந்தைகளுக்குள் ஏற்பட்ட மோதலில், அந்தக் குழந்தையின் முகம், உதடு, நெஞ்சு மற்றும் கால்களில் சக குழந்தைகள் கடித்தும் பிராண்டியும் பயங்கர காயம் ஏற்படுத்தியுள்ளனர். ​கிட்டத்தட்ட அரை மணி நேரம் அந்தக் குழந்தை வலியால் கதறி அழுதும், பள்ளி நிர்வாகம் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும் உண்மையை மூடி மறைத்துள்ளது.

மதியம் குழந்தையை அழைக்க வந்த பெற்றோரிடம் சாதாரணமாக காயம் என்று பொய் கூறி சமாளித்ததோடு, புகாரைத் தவிர்க்க இழப்பீடு தருவதாகவும், புகார் அளித்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் திமிராகப் பேசியுள்ளனர். தற்போது அந்தக் குழந்தை தனியார் மருத்துவமனையில் உள் காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் பள்ளியின் சிஇஓ, முதல்வர், காப்பாளர் உட்பட 6 பேர் மீது சிட்கோ எம்.ஐ.டி.சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.