ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள விஞ்ஞான் நகர் காவல் நிலையத்தில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் ரென்வால் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனிஷ் சர்மா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் மற்றும் சமூக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மனிஷ் சர்மா, சமூக வலைத்தளங்களில் ‘மொய்ன் கான்’ என்ற போலிப் பெயரில் ஆன்லைன் குழுக்களை நடத்தி வந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இவர் போனில் 40000 ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜ்ரங் தளம் அமைப்பினர், இந்த வாலிபர் இந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களின் ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்து பிளாக்மெயில் செய்ததாகவும், அதன் மூலம் அவர்களை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், டெலிகிராம், ஸ்னாப்சாட் மற்றும் டிஸ்கார்ட் போன்ற செயலிகள் மூலம் அவர் பாகிஸ்தானில் உள்ள சில குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், எல்லையைத் தாண்டி அவருக்கு உத்தரவுகள் வந்ததாகவும் கூறி மத்திய உளவு முகமைகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் பஜ்ரங் தளம் அமைப்பு பொதுவெளியில் பரப்பும் பல குற்றச்சாட்டுகள் இதுவரை தங்களது விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை என்று கோட்டா நகர காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டா நகர கூடுதல் எஸ்பி சுபாஷ் மிஷ்ரா கூறுகையில், இந்த வழக்கில் எந்தவிதமான மதமாற்றப் பின்னணியோ அல்லது இந்து தெய்வங்களை அவமதித்ததற்கான ஆதாரங்களோ இதுவரை விசாரணையில் வெளிவரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கைதான வாலிபர் டெலிகிராம் குழுக்களில் இணைந்து ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து தனது மொபைலில் சேமித்து வைத்திருந்தது மட்டுமே தெரியவந்துள்ளதாகவும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
