சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தற்போதைய முதல்வர் விஜயின் புகைப்படத்திற்கு அருகே அரசியல் தலைவர்களின் படங்களை வைப்பது தொடர்பாக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள் சிலர், முதல்வர் விஜயின் படத்திற்கு பக்கத்திலேயே தங்களது கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாமன்ற கூட்ட அரங்கு முழுவதும் பெரும் பரபரப்பும் கூச்சல் குழப்பமும் நிலவி வந்தது. இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, கூட்டத்தில் கலந்துகொண்ட சுயேச்சை மாமன்ற உறுப்பினரான மெய்யர் என்பவர் திடீரென எழுந்து, மாமன்றத்தில் நடிகை திரிஷாவின் படத்தை வைத்தே ஆக வேண்டும் என்று மிக விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தார்.
அதுமட்டுமன்றி, தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவங்கதான் என்று அவர் மேடையிலேயே வாக்குவாதம் செய்யத் தொடங்கியதால், காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்த மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கோபத்தை மறந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். காரைக்குடி மாமன்ற கூட்டத்தையே ஒட்டுமொத்தமாகச் சிரிக்க வைத்த இந்த சுவாரசியமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
