தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள மெட்ரோ நிலையம் அருகே, தனது குடும்பத்தினருடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவர், திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் கேப் ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல் குருகிராம்-ஃபரிதாபாத் எல்லையில் உள்ள வனப்பகுதியில் வீசப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த இந்த ஏழைக் குடும்பம் வேலை தேடி நான்கு மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்துள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் அவர்கள் சாலையோரம் வசித்து வந்த நிலையில், உள்ளூர் பெண் ஒருவரின் உதவியால் அந்தச் சிறுமி அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று அதிகாலை 4.15 மணியளவில், “அப்பா… என்னைக் காப்பாற்றுங்கள்” என்ற சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த தந்தை, தடியுடன் காரைத் துரத்தியும் அவரால் காரை நிறுத்த முடியவில்லை. உடனடியாகப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள், வாகனப் பதிவு எண் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் டெல்லி போலீசார், திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மேற்கு டெல்லியின் விகாஸ்புரியில் பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்த பாஷு குமார் சிங் என்ற ஓட்டுநரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் முதலில் குற்றத்தை மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டு சடலம் வீசப்பட்ட இடத்தை போலீசாருக்குக் காட்டினார். தடயவியல் குழுவினர் திங்கட்கிழமை மாலை சிறுமியின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமியின் கழுத்தில் இறுக்கப்பட்ட தழும்புகளும், முகம் மற்றும் தலையில் கற்கள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டதற்கான பலத்த காயங்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், குற்றவாளியைக் குற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவன்  போலீசாரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவனது காலில் காயம் ஏற்பட்டது. தற்போது அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீசாரைத் தாக்கியதற்காகத் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆனந்த் மிட்டல் கூறுகையில், சிசிடிவி, மொபைல் அழைப்பு விவரங்கள் மற்றும் தடயவியல் ஆதாரங்களைச் சேகரித்து மிக விரைவாக விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான சட்ட மற்றும் சமூக உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.