புதுடெல்லியிலிருந்து குருகிராமிற்கு நள்ளிரவில் பயணித்த பெண் பயணி ஒருவரின் பாதுகாப்பு குறித்து, அவரது குடும்பத்தினரிடம் கேப் ஓட்டுநர் காட்டிய கனிவான நெகிழ்ச்சியூட்டும் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதோடு நள்ளிரவு பயணத்தின் போது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கவலையடைந்ததை உணர்ந்த ஓட்டுநர், “அவள் எனக்கும் தங்கை தான்” என்று கூறி, பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளார். இக்கட்டான நள்ளிரவு நேரத்தில் குடும்பத்தினருக்கு மிகுந்த மன அமைதியைத் தந்த இந்த எளிய மனிதநேயப் பகிர்வு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த நிகழ்வு குறித்து இணையத்தில் கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் ஓட்டுநரின் இந்த பொறுப்புணர்வை வெகுவாகப் பாராட்டி, “பெண்களின் நள்ளிரவுப் பயணங்களுக்கு இதுபோன்ற மனிதநேயக் குரல்கள் பெரும் ஆறுதலாக இருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளனர் வெறும் வார்த்தைகளை மட்டுமே நம்பிவிடாமல், எப்போதும் கேப் விவரங்களைச் சரியாகச் சரிபார்த்து எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும், தவறான எண்ணம் கொண்டவர்கள் யாரும் முன்கூட்டியே அதை வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதால் விழிப்புணர்வு அவசியம் என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
