அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தாங்கள் கூறியது தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டுவதற்காக அல்ல என்றும், அது தங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

தங்களோடு கருத்து முரண்பாடு உள்ளவர்களோடு சேர்ந்திருந்தால் மட்டுமே, பதவிக்காக ஒட்டிக்கொண்டோம் என்ற விமர்சனம் சரியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், விசிக உயர்த்திப் பிடிக்கும் அம்பேத்கரையும், பெரியாரையும், சமூகநீதி அரசியலையும் முதலமைச்சர் விஜய் அவர்களும் உயர்த்திப் பிடிக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.

​தவெக மற்றும் விசிக ஆகிய இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் ஒன்றாக இருக்கும் போது இதில் எங்கு முரண்பாடு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன், இன்னும் தாங்கள் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்பதை மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்தார்.

கொள்கை அளவில் ஒன்றிணைந்து செயல்படும் தவெக அரசுடன் தங்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை என்றும், தங்களின் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டவே அமைச்சரவை குறித்த கருத்துக்களைப் பகிர்ந்தோம் என்றும் அவர் தனது உரையில் ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.