பூமியின் மேற்பரப்பில் மனித நடமாட்டமும் வாழ்க்கையும் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முற்றிலும் மாறாக பூமிக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான விசித்திர உலகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ‘அட்மோஸ்’ (Atmos Cave) என்ற குகைப் பகுதியில் செக் குடியரசைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் அதிநவீன முப்பரிமாண (3D) ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது சுமார் 330 அடி ஆழமுள்ள ஒரு பெரிய பாதாளப் பள்ளத்தின் அடிப்பகுதியில், முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி (Underground Thermal Lake) அமைந்திருப்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். ‘லெக் நியூரான்’ (Lake Neuron) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏரியானது சுமார் 454 அடி நீளமும், 138 அடி அகலமும் கொண்டு, கிட்டத்தட்ட மூன்றரை ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் கொள்ளளவிற்குச் சமமான பிரம்மாண்டத்தைக் கொண்டுள்ளது.

முற்றிலும் கனிமங்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியின் நீர், பூமியின் உட்புற வெப்பத்தால் எப்போதும் 79 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் கொதித்துக் கொண்டே இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ராட்சத ஏரியில் தோராயமாக 2.9 லட்சம் கன அடி வெப்ப நீர் தேங்கியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், இதில் நச்சுத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் சல்பைடு வாயு கலந்திருப்பதால் அழுகிய முட்டையின் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடினமான பாறைகளைக் கந்தக அமிலம் மெல்ல மெல்லக் கரைத்ததன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையாகவே இந்த நிலத்தடி ஏரி உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த ஏரியின் நீர் அங்கிருக்கும் பள்ளத்தாக்குகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு ஆதாரமாக விளங்குவதாகவும், இந்த இருண்ட தீவிரச் சூழலில் வாழும் விசித்திரமான நுண்ணுயிரிகள் மற்றும் பூமியின் உள் கட்டமைப்பு குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.