தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசரா பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரண்டு வயதுக் குழந்தையைக் பெற்ற தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சுவாமி என்ற டாக்ஸி ஓட்டுநருக்கும் ஜோதி என்பவருக்கும் திருமணமாகி 4 வயது மகளும், ஹரிகிருஷ்ணா என்ற 2 வயது மகனும் இருந்தனர்.

திருமணத்திற்கு முன்பே நவீன் என்ற இளைஞருடன் காதலில் இருந்த ஜோதி, திருமணத்திற்குப் பிறகும் கணவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் நவீனை வீட்டிற்கு வரவழைத்துக் கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளார். கடந்த மே 29 அன்று சுவாமி வேலைக்குச் சென்றிருந்தபோது நவீன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தை ஹரிகிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், தங்களின் தனிமைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி குழந்தையைக் கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர்.

பெற்ற தாய் என்றும் பாராமல் ஜோதியும் அவளது கள்ளக்காதலன் நவீனும் சேர்ந்து, 2 வயதுக் குழந்தையின் காலைப் பிடித்து அந்தரத்தில் சுழற்றி, முழு பலத்துடன் தரையில் வீசி அடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து உள் ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. பின்னர், கணவரை நம்ப வைப்பதற்காகக் குழந்தைக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக ஜோதி நாடகமாடியுள்ளார். கணவனும் அதனை நம்பி, தங்களது சொந்த ஊரான டீகுல் கிராமத்தில் முறைப்படி குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், உறவினர்கள் முன்னிலையில் ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையைக் கொன்ற உண்மையை 20 நாட்களுக்குப் பிறகு அவள் ஒப்புக்கொண்டாள்.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த சுவாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், நீதித்துறை நடுவர் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவர்கள் முன்னிலையில் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. கொடூரத் தாய் ஜோதியைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் நவீனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.