தமிழக அரசியல் களத்தில் திமுக – அதிமுக கூட்டணி விவாதம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. அண்மையில் த.வெ.க. அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது குறித்துப் பேசிய சண்முகம், “த.வெ.க-வை ஆதரித்ததன் மூலம், திமுகவின் மறைமுக ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கும் தவறை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கம்யூனிஸ்டுகள் ஏதோ அதிமுகவைத் தீண்டத்தகாத கட்சி போல் பேசுகிறார்கள். கடந்த காலங்களில் நீங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்து ராஜ்யசபா எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளைப் பெறவில்லையா? அப்படியே நாங்கள் கொள்கை அளவில் அதிமுகவுடன் இணக்கமாக இருந்தாலும் அதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது? இந்தத் தேர்தல் யார் நண்பன், யார் பகைவன் என்பதை எங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது, விரைவில் எங்களுடைய பலத்தைக் காட்டுவோம்” என்று ஆவேசமாகப் பதிலளித்திருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்தக் கேள்விக்குத் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தற்பொழுது மிகக் காரசாரமானப் பதிலடியைக் கொடுத்துள்ளார். சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் ஒருபோதும் சமமாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்காலத்தில் திராவிடக் கட்சிகள் தங்களது பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை என்று சாடினார்.

மேலும் தேர்தல் அரசியலில் வெறும் ஓட்டுகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் பேசுகிறார்களே தவிர, களத்தில் நின்று உண்மையாகப் போராடுவதில்லை என்றும், கொள்கைகளில் தொடர்ந்து சமரசம் செய்து தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ள திராவிடக் கட்சிகள், வரும் காலத்தில் ‘திமுக மற்றும் அதிமுக’ என இரண்டும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மிக அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.