கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுத உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 307 தேர்வு மையங்களில் 1.42 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, நாடு முழுவதும் உள்ள 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில் சிசிடிவி (CCTV) கேமரா வசதிகளும், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்புகளும், 51,311 ஜாமர்களும் அதிரடியாக நிறுவப்பட்டுள்ளன.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், அதன் பிறகு மையத்தின் கேட் முழுமையாக மூடப்பட்டு, எக்காரணத்தைக் கொண்டும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேசிய தேர்வு முகமை (NTA) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும், எலெக்ட்ரானிக் சாதனங்கள், குறிப்பிட்ட ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களது அடையாள ஆவணங்களுடன், அஞ்சல் அட்டை (Postcard) அளவில் புகைப்படம் ஒட்டி, கையெழுத்திட்ட ஹால் டிக்கெட் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
