தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடியான ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதி, தங்களின் மூத்த மகளான கிளின் காராவின் (Klin Kaara) முகத்தை முதன்முறையாக உலகிற்குக் காட்டி ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். ‘மெகா இளவரசி’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கிளின் காராவின் 3-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் தெளிவான முதல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதுவரை தங்களின் குழந்தைகளின் முகங்களை ஊடக வெளிச்சம் படாமல் மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வந்த இந்தத் தம்பதி, இந்த விசேஷ நாளில் அதை உடைத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தில் ராம் சரண் வான் நீல நிறச் சட்டையில் கரடுமுரடான (Rugged look) தோற்றத்தில் தனது செல்ல மகளைக் கைகளில் ஏந்தியிருக்க, உபாசனா வெள்ளை நிற உடையில் தன் கணவரையும் மகளையும் ஆசையோடு ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela)

பூக்கள் டிசைன் போட்ட நீல நிற உடையில் கிளின் காரா தேவதை போலக் காட்சியளிக்கிறார். “எங்கள் செல்லக் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவர்கள் பதிவிட்டுள்ள இந்த அழகிய புகைப்படத்திற்கு நடிகை சமந்தா ருத் பிரபு உட்படப் பல திரைப்பிரபலங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தங்களுக்குப் பிறந்த ‘ஷிவ்ராம்’ மற்றும் ‘அன்வீரா தேவி’ ஆகிய இரட்டைக் குழந்தைகளின் கைகளைப் போன்ற புகைப்படத்தை ஜூன் 15-ல் உபாசனா பகிர்ந்து “மனம் நிறைந்தது” என்று நெகிழ்ந்திருந்த நிலையில், தற்போது மூத்த மகளின் முகத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த மெகா குடும்ப ரசிகர்களையும் குஷியடைய வைத்துள்ளது.