அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மலோனி ஆகிய இருவருக்கும் இடையே உலக அரங்கில் வெடித்துள்ள மோதல் தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் நடந்த ஜி-7 (G-7) மாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மலோனி தன்னிடம் வந்து ஓயாமல் புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதாகவும், ஆனால் இத்தாலியில் மலோனியின் செல்வாக்கு சரிந்து வருவதால் தான் அவர் தன் பின்னால் சுற்றுவதாகவும் டிரம்ப் தனது ‘டிரூத் சோசியல்’ (Truth Social) சமூக வலைத்தள பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இத்தாலி ஆதரவு அளிக்காததையும், அமெரிக்க ராணுவத்திற்கு இத்தாலியின் விமான ஓடுதளங்களைப் பயன்படுத்த மலோனி அனுமதி தராததையும் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்கா இத்தாலி போன்ற நேட்டோ (NATO) நாடுகளின் பாதுகாப்பிற்குப் பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுக்கும் போது, இப்போது ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா ஜெயித்தவுடன் மலோனி தனது செல்வாக்கை உயர்த்த மீண்டும் தன்னிடம் நட்பு பாராட்டத் துடிப்பதாகவும், அதற்குத் தனக்கு விருப்பமில்லை என்றும் டிரம்ப் திமிராகக் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த சர்ச்சை பேச்சுக்குச் சற்றும் தயங்காமல் உடனடியாக மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மலோனி, “டிரம்பின் பேச்சுகள் அனைத்தும் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய்கள்; அமெரிக்க அதிபர் தனது நட்பு நாடுகளிடம் ஏன் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறார் என்று புரியவில்லை” என விளாசியுள்ளார்.

மேலும், மேற்கத்திய நாடுகளின் உண்மையான எதிரிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளும் டிரம்ப், நட்பு நாடுகளிடம் மட்டும் சீறுவது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ள மலோனி, “டிரம்பிற்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நானோ அல்லது எனது இத்தாலி நாடோ யாருடைய காலிலும் விழுந்து ஒருபோதும் கெஞ்ச மாட்டோம்” என்று நெத்தியடியாகப் பேசியுள்ளது உலக அளவில் டாப் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.