உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஆன்மீகம் மற்றும் மந்திரவாதம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி வந்த போலிச் சாமியார் ‘பாட்டில் பாபா’ என்ற ஹரியோம் யாதவ் என்பவனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நபர் சுமார் 8 முதல் 10 பிகார் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட ஆசிரமத்தை அமைத்து, வெறும் தண்ணீர் பாட்டிலில் வாயால் ஊதியே கேன்சர் போன்ற கொடிய நோய்களைக் குணப்படுத்தி விடுவதாகப் பொய் விளம்பரம் செய்து வந்துள்ளான்.
இந்த மூடநம்பிக்கையை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் இவனிடம் வந்து ஏமாந்த நிலையில், அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இவனின் கொடூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டி, பெண்ணின் மீது ‘கருப்பு நிழல்’ (பில்லி சூனியம்) இருப்பதாகப் பயமுறுத்திய பாபா, அதை நீக்க 40 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துள்ளான்.
பின்னர், கடந்த ஜூன் 15 அன்று ஆசிரமத்தில் உள்ள ஒரு தனி அறைக்கு அந்தப் பெண்ணை வரவழைத்து, அநாகரிகமாகத் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். அந்தப் பெண் சத்தம்போடவே, அவளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான் அந்தப் போலிச் சாமியார்.
இதனால் துணிச்சலாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், ஏஎஸ்பி ஆலோக் பிரசாத் உத்தரவின்படி போலீஸார் ‘பாட்டில் பாபா’ மற்றும் அவனது உடந்தையாக இருந்த அவனது மருமகன் தீபக் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசிடம் சிக்கிய பிறகும் எந்தவொரு பயமும் இல்லாமல், “கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், என் மீது பொய் வழக்குப் போட்டு சதி செய்கிறார்கள்” என்று அந்தப் போலிச் சாமியார் திமிராகப் பேசியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
