விசாகப்பட்டினத்தில் வசிக்கும் 53 வயதான சவரா பாஸ்கர் என்பவரின் மனைவி சவரா ராதா, கடந்த மார்ச் 10, 2025 அன்று எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 50 லட்சம் ரூபாய்க்கான ‘ஸ்மார்ட் ப்ரொடெக்ட் பிளான்’ காப்பீட்டை எடுத்தார். இதற்காக ஆண்டு பிரீமியமாக 50,000 ரூபாயும் செலுத்தப்பட்டது.

இதனால் துரதிர்ஷ்டவசமாக, பாலிசி எடுக்கப்பட்ட வெறும் 5 நாட்களில், அதாவது மார்ச் 15, 2025 அன்று, ராதாவுக்கு வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது கணவர் பாஸ்கர் காப்பீட்டுத் தொகையைக் கோரியபோது, விண்ணப்பப் படிவத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாகக் கூறி, பாலிசியை ரத்து செய்வதாக காப்பீட்டு நிறுவனம் கடிதம் அனுப்பி அவரது கோரிக்கையை நிராகரித்தது.

மேலும் காப்பீட்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாஸ்கர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த விசாகப்பட்டினம் நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் குட்லா தனுஜா மற்றும் உறுப்பினர் வர்ரி கிருஷ்ணா மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, முறையான ஆதாரங்கள் இல்லாமல் விலக்கு பிரிவுகளைக் காட்டி பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்று காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்தது.

மேலும், காப்பீட்டுத் தொகையான 50 லட்சம் ரூபாயை 6% வட்டியுடன் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், கணவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 25,000 ரூபாயும், வழக்குச் செலவாக 5,000 ரூபாயும் சேர்த்து வழங்குமாறு எச்டிஎஃப்சி நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.