பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டின் போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கெஞ்சிப் போட்டோ எடுத்ததாக டிரம்ப் கொளுத்திப் போட்ட விவகாரம், தற்போது அமெரிக்கா – இத்தாலி இடையே மிகப்பெரிய தூதரகப் போராக வெடித்துள்ளது.
இத்தாலியின் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த டிரம்ப், “மெலோனி என்னிடம் வந்து ரொம்பவே கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், அவர் மீது பரிதாபப்பட்டுத்தான் நான் அந்தப் போட்டோவுக்குச் சம்மதித்தேன்” என்று மட்டம்தட்டிப் பேசியிருந்தார்.
இதனால் செம்ம கடுப்பான இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் (X) தளத்தில், “டிரம்பின் பேச்சு முற்றிலும் பொய்; இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். டிரம்ப் தனது ஜனநாயக நட்பு நாடுகளிடம் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல; ஆனால், அவரே மிரட்டினாலும் நானும் சரி, இத்தாலி நாடும் சரி யாரிடமும் கெஞ்சும் பழக்கம் கொண்டவர்கள் கிடையாது என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் இத்தாலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இத்தாலியின் துணைப் பிரதமர் அன்டோனியோ தாஜானி, தனது நாட்டை அவமதித்த அமெரிக்காவுக்குத் தான் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செல்லவிருந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்து அமெரிக்காவுக்குப் பலத்த அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து, அவரது 2025 பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஒரே ஐரோப்பியத் தலைவரான மெலோனி, தற்போது போப் ஆண்டவர் விவகாரம் மற்றும் ஈரான் போர் கொள்கைகளில் அமெரிக்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டிரம்பை விட்டுத் தள்ளியே நிற்பது குறிப்பிடத்தக்கது.
