பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இரவு நேரத்தில் கழிவறைக்குச் சென்ற திருமணமான பெண் ஒருவர், ஐந்து பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடத்தப்பட்ட அப்பெண்ணின் கை, கால்களைக் கட்டிய அந்த மிருகங்கள், அவரது உடலில் கத்தியால் குத்தி கொடூரமாகத் தாக்கியதோடு, வரிசையாக வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் நிற்காத அந்தக் குண்டர்கள், அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்குள் தோட்டா, கற்கள் மற்றும் மரக்கட்டைகளைத் திணித்து வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே கும்பல் அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதோடு, அவருக்குப் பாலியல் தொல்லை தர முயன்றதாகவும், அதுகுறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்போது அதே கும்பல் இந்த விபரீதக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண் மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், வீட்டிற்குத் திரும்பிய பிறகும் அவருக்குத் தாங்க முடியாத கடுமையான வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 17 அன்று அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் நடத்திய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில், அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியிலிருந்து ஒரு தோட்டா, ஒரு கல் மற்றும் மரத்துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்து பல நாட்களாகியும், உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததைத் தாண்டி குற்றவாளிகள் மீது எந்தவொரு முறையான தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து தூக்கிலிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
