பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு (Telegram) விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு இந்த உத்தரவை உரிய ஆலோசனையின்றி பிறப்பிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி தேஜஸ் கரியா அமர்வு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-ன் கீழ் ஒரு தளத்தைத் தடை செய்ய மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இந்த உத்தரவு சரியான அடித்தளத்தைக் கொண்டது என்றும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி நெட்வொர்க்குகளுக்கு டெலிகிராம் தளம் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் விசாரணையின் போது, டெலிகிராம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா, ஒட்டுமொத்த தளத்தையும் முடக்குவதற்குப் பதிலாக குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே முடக்கியிருக்கலாம் என்றும், இது அவசரநிலை அல்ல என்றும் வாதிட்டார். மேலும், ஒரு சில குடிமக்கள் தேர்வு எழுதுவதற்காக 15 கோடி பயனர்களின் குரலை நசுக்கலாமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த முடக்க உத்தரவு உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே பிறப்பிக்கப்பட்டது என்றும், பின்னர் அமைச்சரவை செயலாளரின் தலைமையிலான குழுவால் மறுஆய்வு செய்யப்பட்டது என்றும் விளக்கினார்.

மேலும், டெலிகிராம் செயலி தற்போது பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளை இணைக்கும் புதிய ‘டார்க் வெப்’ (Dark Web) ஆக மாறி வருவதாகவும், இதில் அடங்கியுள்ள பெரிய பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை அவசியமாகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் டெலிகிராம் நிறுவனத்தின் மனுவை நிராகரித்தது.