மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த அண்டை நாடு என்பதை நிரூபிக்கும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு 5 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் கூடுதல் தொகுப்பை இந்தியா காபூலுக்கு அனுப்பியுள்ளது. “தூரத்து நண்பர்களை விட அண்டை நாடுகளுக்கே எப்போதும் முதலிடம்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் இந்த மனிதாபிமான உதவிக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில், சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

இந்தியா எப்போதும் தனது ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ என்ற கொள்கையின்படி, ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் நேபாளம், மாலத்தீவு, இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஆபத்துக் காலங்களில் தொடர்ந்து உதவி வருகிறது. நடப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 3 டன் வெள்ள நிவாரணப் பொருட்களையும், மே மாதத்தில் பிசிஜி, டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா உள்ளிட்ட நோய்களுக்கான 33 டன் தடுப்பூசிப் பொருட்களையும் இந்தியா வழங்கியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானின் சுகாதாரத் துறையை மேம்படுத்த வெண்டிலேட்டர், கார்டியோகிராஃப் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்களையும் வழங்கி இந்தியா தனது அண்டை நாட்டு நட்புறவை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.