இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் ‘சூப்பர் ஓவர்’ வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் களம் இறங்கிய இந்திய அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ரன் ஏதும் எடுக்க முடியாமல் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இதனால் அதிர்ச்சியில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, இலங்கை வீரர் விஷன் ஹலம்பகே அவரைத் தொடர்ந்து வம்புக்கு இழுத்துள்ளார். “மேட்ச் முடிந்துவிட்டது, வீட்டிற்கு கிளம்பு” என வம்பிழுத்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வைபவ், ஹலம்பகேவை கைகளால் பிடித்து பலமாகத் தள்ளியதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்குப் போட்டியாக இலங்கை வீரரும் திருப்பித் தள்ள, இரு அணிகளின் மற்ற வீரர்கள் உடனடியாக உள்ளே புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி வைத்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைப்படி, சக வீரர்களிடம் மைதானத்தில் வன்முறையில் ஈடுபடுவது விதிமீறலாகும்.
இதற்கு அபராதமோ அல்லது சில போட்டிகளில் விளையாடத் தடையோ விதிக்கப்படலாம். இருப்பினும், இது அதிகாரப்பூர்வ ‘ஏ’ அணிகளின் தொடர் என்பதால், ஐசிசி (ICC) நேரடியாக இதில் தலையிடாது. மேலும், இரு நாட்டு வீரர்களும் அங்கேயே பேசிப் பிரச்சினையை முடித்துக் கொண்டதாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதாலும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராகப் பெரிய அளவில் தடை நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
