பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் அழகுச் சாதனப் பொருட்களின் (Cosmetics) பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், கேரளாவில் ‘லிப்ஸ்டிக் இல்லாத வளாகங்கள்’ என்ற அதிரடி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் குழந்தைகள் நலக்குழு (CWC) தீவிரமாகத் தொடங்கியுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் அழகுச் சாதனப் பொருட்களில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் குழந்தைகளுக்குக் குடல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதாரத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வில், கொல்லம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டக் குழந்தைகளிடையே குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மையநாடு மேல்நிலைப் பள்ளியில் பிரபல கவிஞர் குரீப்புழா ஸ்ரீகுமார் இப்பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
பள்ளிகளில் இடைவேளையின் போது மாணவர்கள் லிப்ஸ்டிக், ஐலைனர் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். லிப்ஸ்டிக், ஃபேஸ் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாதரசம் (Mercury), காட்மியம் போன்ற நச்சுக்கள் கலந்திருப்பதை கடந்த ஆண்டு மருந்து கட்டுப்பாட்டுத் துறை கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தது.
இத்தகைய பொருட்கள் பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. பெரியவர்களை விடக் குழந்தைகளுக்குப் பாதிப்பு அதிகம் என்பதால், மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, இதனை முழுமையாக ஒழிக்கும் பள்ளிகளுக்கு ‘லிப்ஸ்டிக் இல்லாத வளாகம்’ என்ற அந்தஸ்து வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
