அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்குப் பல்வேறு முக்கியச் சலுகைகளை வழங்க அமெரிக்கா சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் ‘மெஹர்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள 14 அம்ச வரைவு அறிக்கையின்படி, போரினால் பாதிக்கப்பட்ட ஈரானை மீண்டும் மறுசீரமைப்பு செய்ய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து 300 பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 லட்சம் கோடி) நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் பணத்தையும் விடுவிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறை மீதான தடைகள் முற்றிலுமாக நீக்கப்படவுள்ளன. இதனால் ஈரான் உலக நாடுகளுக்கு மீண்டும் தடையின்றி கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடியும். பதிலுக்கு, உலகளாவிய கடல்சார் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அதற்கு அடுத்த 30 நாட்களுக்குள் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், ஈரானின் அணுசக்தி கட்டுப்பாடுகள் மற்றும் நிதி விடுவிப்பு தொடர்பான இறுதி முடிவுகளில் இன்னும் சில சிக்கல்கள் நீடிப்பதால், அடுத்த 60 நாட்களுக்கு நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.