அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றக்காரர்களைக் கண்டறிந்து, ஊடுருவலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் புதிய ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் அசாமின் சில மாவட்டங்களில் ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை, அந்த மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகையை விட 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் ஆதார் அட்டையைப் பெற்று, அதன் மூலம் இந்தியக் குடியுரிமை கோருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தடையிலிருந்து பழங்குடியினர், பட்டியலினத்தவர் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் 2027 மார்ச் மாதம் வரை தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, வரும் 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் ஆதார் வழங்கும் பணி முற்றிலும் நிறுத்தப்படும்.

ஏதேனும் மிக முக்கியமான அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளில் ஆதார் தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு ஆய்வு செய்து மட்டுமே அனுமதி வழங்கும். அதே நேரத்தில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஆதார் வழங்கும் பணி எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் தொடரும் என்றும் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.