அ.தி.மு.க-வில் தற்போதைய சூழலில் உண்மை உழைப்பாளர்களுக்கு மதிப்பில்லை என்றும், பணம் படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே முக்கியப் பதவிகள் வாரி வழங்கப்படுவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கூறி, அக்கட்சியிலிருந்து விலகப் போவதாக அவர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து உண்மைத் தொண்டர்கள் இன்று அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்படுகிறார்கள். கட்சியின் தற்போதைய தலைமை, கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களை மட்டுமே தேடித்தேடிப் பதவிகளில் அமர்த்துகிறது; சாதாரணத் தொண்டர்களின் உழைப்பு திட்டமிட்டுச் சுரண்டப்படுகிறது” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், குமரி மாவட்ட அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல்களையும், தலைமை மீதான தனது அதிருப்தியையும் அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த தனக்குத் தொடர் துரோகங்களே மிஞ்சியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தலைமைக்கு நெருக்கமான ஒருசிலரின் சுயநலப் போக்கால், தொண்டர்களின் கோட்டையாக இருந்த அ.தி.மு.க இன்று பணக்காரர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகச் சாடிய அவர், கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாகவும், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் குமரி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
