மக்களின் இரவு நேரத் தூக்கத்தைக் கெடுக்கும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, பல தலைமுறைகளாக கொசுவலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக கொசுவலையை கட்ட நான்கு பக்கமும் கயிறு, ஆணி அல்லது சுவர்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால், தற்போதைய சமூக வலைத்தளங்களில் எவ்வித கயிறோ, சுவரோ தேவையின்றி கொசுவலை கட்டும் முற்றிலும் வித்தியாசமான, தனித்துவமான  வீடியோ ஒன்று வைரலாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு நபர் தான் தூங்குவதற்காகப் பயன்படுத்தும் கயிற்றுக் கட்டிலை  நேராகப் போடுவதற்குப் பதிலாக, தலைகீழாகத் தரையில் குப்புறப் போடுகிறார். கட்டிலின் நான்கு கால்களும் மேல்நோக்கி இருக்கும்படி வைத்த அந்த நபர், அதன் பிறகு செய்த காரியம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தலைகீழாகப் போடப்பட்ட அந்த கட்டிலின் அடியில், அதாவது தரையில் தனது படுக்கையை விரிக்கும் அந்த நபர், கொசுவலையை எடுத்து மேல்நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் கட்டிலின் நான்கு கால்களிலும் மிக லாவகமாக மாட்டுகிறார். கயிறு, கொக்கிகள் என எவ்வித கூடுதல் உபகரணங்களும் இன்றி, கட்டிலின் கால்களே கொசுவலைக்குச் சிறந்த தூண்களாக மாறி, சில நொடிகளில் ஒரு சிறிய பாதுகாப்பான அறை போல உருவெடுக்கிறது.

கொசுவலை கட்ட சரியான வசதி இல்லாத கிராமப்புறங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளுக்கு இந்த எளிய தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர். எக்ஸ் (X) தளத்தில் ‘@vstechsolution’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ‘தேவையே கண்டுபிடிப்புகளின் அன்னை’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.