தனது கள்ளக்காதலனின் பிறந்தநாள் பரிசாக, அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போலீஸ் சீருடை அணிந்து போலி காவலராக வலம் வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவருக்கு, மேல் அரசம்பட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமரேசன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு போலீஸ் உடை அணிய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த நிலையில், அதனை அறிந்த அவரது கள்ளக்காதலன், தனது பிறந்தநாளுக்கு போலீஸ் உடையில் வந்து தனக்கு இன்ப அதிர்ச்சி (சர்ப்ரைஸ்) தருமாறு கேட்டுள்ளார். காதலனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அந்த இளம்பெண், முறைப்படி காவல்துறை உடைகளை வாங்கி, அதனை அணிந்து கொண்டு காதலனைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

இருப்பினும், பொதுவெளியில் போலீஸ் சீருடையில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய அந்தப் பெண்ணின் நடத்தை குறித்து காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் விரைந்து வந்த உண்மையான போலீஸார், அந்தப் பெண்ணை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், காதலனின் பிறந்தநாள் ஆசைக்காக போலி போலீஸ் வேடமிட்டு ஏமாற்றியதும் அம்பலமானது. இதையடுத்து, அரசு அதிகாரியைப் போல போலி வேடமிட்டது மற்றும் சட்டவிரோதமாக போலீஸ் சீருடையைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த வேப்பங்குப்பம் போலீஸார், அந்த இளம்பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.